Monday, 10 February 2014

எனது நாடு சினிமா

எனது நாட்டில்

பட்டங்கள் பல படித்தால்,
வேலை கிடைக்காது.

படங்கள் சில நடித்தால்,
நாடே கிடைக்கும்.

Tuesday, 14 January 2014

தனி ஈழம் சாத்தியமா?

(திமுக மத்திய அரசுக்கான ஆதரவை வாபஸ் பெறுவதாக அறிவிப்பதற்கு முன் இந்த பதில் உணர்வு இதழில் வெளியானது என்பதைக் கவனத்தில் கொள்க) 

கேள்வி:
இலங்கைப் பிரச்சினைக்காக தமிழகம் முழுவதும் கல்லூரி மாணவர்கள் சாகும்வரை உண்ணாவிரதம் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். இதனால் இவர்கள் எதிர்பார்க்கும் பலன் ஏற்படுமா? 
- மசூது, கடையநல்லூர் 

பதில்:
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் தங்களின் முதல் கோரிக்கையாக தனிஈழம் என்பதை முன்வைக்கின்றனர். அதாவது இலங்கையின் வடக்கு மாகாணத்தை இலங்கையிலிருந்து பிரித்து அதைத் தமிழர்களின் தனிநாடாக ஆக்கவேண்டும் என்பது முதல்கோரிக்கை.  

அமெரிக்கா  கொண்டுவந்துள்ள தீர்மானத்தை இந்திய அரசு ஆதரிக்க வேண்டும் என்பது இரண்டாவது கோரிக்கையாகும். 

இதில் முதலாவது கோரிக்கை எள்முனையளவும் நடப்பதற்கு வாய்ப்பே இல்லை. எந்தநாடும் தனது நிலப்பரப்பைப் பிரித்து இன்னொரு நாட்டை ஏற்படுத்திவிட்டு ஒதுங்கிக்கொள்ள ஒப்புக் கொள்ளாது. தனிநாடு கோருவோரின் கடுமையான பதிலடி காரணமாக, ராணுவமும் காவல்துறையும் சோர்வடைந்து இனிமேல் அவர்களை எதிர்த்து ஒன்றும் செய்ய முடியாது என்ற அளவுக்கு பலவீனம் அடையும்போது மட்டுமே வேறுவழி இல்லாமல் தொலைந்து போகட்டும் என இதற்கு ஒப்புக் கொள்வார்கள். அல்லது உலகநாடுகள் அனைத்தும் அல்லது வல்லரசுநாடுகள் அனைத்தும் ஒன்று சேர்ந்து கடும்விளைவு ஏற்படும் என்று எச்சரிக்கும் அளவுக்கு ஒருநாடு தனிமைப்படுத்தப்பட்டால் அப்போது வேறுவழியில்லாமலும், எஞ்சிய பகுதியையாவது தக்கவைத்துக் கொள்வதற்காகவும் தனிநாடு கோரிக்கையை அந்தநாடு ஏற்றுக்கொள்ளும். 

இலங்கையில் பிரபாகரன் உயிருடன் இருந்து இலங்கை அரசுக்கு எதிராகக் கடுமையான பதிலடி கொடுத்துவந்த போதும், வடக்குப்பகுதியை தனது கட்டுப்பாட்டில் வைத்து இலங்கை ராணுவம் நுழையவிடாமல் தடுத்துக்கொண்டு இருந்தபோதும், வடக்குப் பகுதியைக் கடந்து கொழும்பு நகருக்குள் ஊடுருவி இலங்கைத் தலைவர்கள் மற்றும் இராணுவத் தளங்களைத் தாக்கிய போதும், வேறுநாடாக இருந்தால் தொலைந்து போகட்டும் என்று தனிநாடாக ஆக்கி இருப்பார்கள். ஆனால் விடுதலைப்புலிகளின் கடுமையான அனைத்து தாக்குதல்களுக்குப் பின்னரும், இலங்கையானது தனிநாடு கோரிக்கையை ஏற்கமறுத்து விட்டது. சில ராணுவவீரர்கள் ராணுவத்தைவிட்டு ஓட்டம்பிடிக்கும் அளவிற்கு நிலைமை இருந்தும், அந்தநாடு தனிநாடு கோரிக்கையை ஏற்க மறுத்துவிட்டது. 

இன்று அங்கு விடுதலைப்புலிகள் முற்றாக ஒழிக்கப்பட்டுள்ளனர். சரணடைந்த புலிகள்கூட பெரும்பாலும் கொன்று குவிக்கப்பட்டனர். விடுதலைப்புலிகளின் குடும்பத்தில் இருந்த பெண்களும் சிறுவர்களும்கூட அழிக்கப்பட்டுவிட்டனர். தனிநாடு என்ற வார்த்தையைப் பயன்படுத்த ஒருவர் கூட இல்லாத அளவுக்கு துடைத்து எறியப்பட்ட பின்னர், தமிழகத்தில் உண்ணாவிரதம் இருப்பது இலங்கை அரசால் கோமாளித்தனமாகத்தான் பார்க்கப்படும். வேறு எந்தப் பயனையும் ஏற்படுத்தப் போவதில்லை.

விடுதலைப்புலிகளின் கடுமையான போராட்டத்தின்போது இலங்கைக்கு உலகநாடுகள் நெருக்கடி கொடுத்து இருந்தால், தனிஈழம் கிடைத்துவிடும் என்றநிலை ஒருகாலத்தில் இருந்தது. அப்போது இந்தியாவில் இருந்த ஐந்துகோடிக்கும் மேலான தமிழர்கள் மொழிஉணர்வின் காரணமாக ஒட்டுமொத்தமாக விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக இருந்தனர். அரசியல் கட்சியினர் பெருமளவில் அவர்களுக்கு நிதியுதவி அளித்தனர். தமிழக ஆட்சியாளர்கள் விடுதலைப்புலிகள் தங்கிட இங்கு அடைக்கலம் கொடுத்தனர். ஒட்டுமொத்த தமிழகமும் ஒன்றுதிரண்டு ஆதரிக்கிறது என்ற நிலைமை காரணமாக, மத்திய அரசும் இலங்கை விவகாரத்தில் தலையிட்டது. அமைதிப்படையை அனுப்பி விடுதலைப்புலிகள் முற்றிலும் அழிக்கப்படாமல் காப்பாற்றியது. இலங்கையின்மீது அத்துமீறிப் பறந்து தமிழர்கள் வாழும் பகுதிகளில் உணவுப்பொட்டலங்கள் போட்டு, இலங்கை அரசுக்கும் கடுமையான எச்சரிக்கையும் விட்டது. அந்தநிலை நீடித்து இருந்தால், உலகநாடுகளின் ஆதரவுடன் தனிநாடு அமைய இந்திய அரசும் உதவுவதற்கான வாய்ப்புகள் இருந்தன. 

ஆனால் அவற்றையெல்லாம் விடுதலைப் புலிகள் தங்களது செயல்களால் நாசமாக்கி விட்டனர். இந்தியாவிற்குள்ளேயே தங்களது பயங்கரவாதச் செயல்களை விடுதலைப்புலிகள் அரங்கேற்றினார்கள். முன்னாள் பிரதமராக இருந்த ராஜிவ்காந்தியை இந்திய மண்ணில் அதுவும் இவர்களுக்கு அடைக்கலம் கொடுத்து வந்த தமிழகத்தில் வைத்தே சமாதி கட்டினார்கள். உலகின் மிகப்பெரிய ஜனநாயகநாடான இந்தியாவின் இறையாண்மைக்கு எதிராக இவர்கள் நடத்திய போர் ஆறாதவடுவாக அதிகாரிகள் உள்ளத்தில் ஆழமாகப் பதிந்துவிட்டது. விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக யாரும் வாய்திறக்க முடியாதநிலை அப்போது தமிழகத்தில் ஏற்பட்டது. ஜெயலலிதா போன்ற சிலதலைவர்கள் விடுதலைப்புலிகளின் செயல்களை துணிவுடன் கண்டித்தனர். விடுதலைப்புலிகளின் கொலைப்பட்டியலில் ஜெயலலிதாவும் உள்ளார் என்ற உளவுத்துறையின் தகவலால், அவருக்கு இசட்பிளஸ் பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டது. 

தமிழகத்தில் மன்னிக்க முடியாத பாதகத்தைச் செய்த புலிகளை ஒழித்துக் கட்ட மத்தியஅரசு முழுவீச்சில் களமிறங்கியது. ராஜிவ்காந்தியின் மனைவியிடமும், அவரது மகனிடமும் முழுஅதிகாரமும் குவிந்துள்ள நிலையில் விடுதலைப்புலிகளின் கணக்கைத் தீர்க்க அவர்கள் நினைப்பதில் ஆச்சரியம் ஏதுமில்லை. எனவே புலிகளை ஒழித்துக்கட்ட அனைத்து விதமான உதவிகளையும் இலங்கை அரசுக்கு மத்தியஅரசு செய்து கொடுத்ததிலும் ஆச்சரியம் இல்லை. ஆயுத சப்ளை வழங்கி இந்திய ராணுவத்தின் உதவியுடன் இலங்கை இராணுவத்திற்கு பயிற்சி அளித்தும், தேவையான வியூகங்களை வகுத்துக் கொடுத்தும், புலிகளை முற்றிலுமாக ஒழிக்க எல்லா உதவிகளையும் மத்திய அரசுசெய்து கொடுத்ததால்தான் இலங்கை ராணுவம் புலிகளை வேறோடு அழிக்கமுடிந்தது. 

விடுதலைப்புலிகள் தங்களுக்கு பக்கபலமாக இருந்த மாபெரும் நாட்டை தங்களது கொடும் செயலால் எதிரியாக ஆக்கிக் கொண்டு இருக்கா விட்டால், தனிஈழம் இன்னேரம் அமைந்திருக்கலாம். அல்லது அதிகாரப் பகிர்வுடன் கூடிய தனிமாகாணம் இந்துத் தமிழர்களுக்கு ஏற்படுத்தப்பட்டு இருக்கலாம். அதைக் கெடுத்து விடுதலைப்புலிகள் நாசமாக்கிக் கொண்டனர். மதத்தால் வேறுபட்டாலும், மொழியால் ஒன்றுபட்ட தமிழ்கூறும் முஸ்லிம்களைத் தங்களின் முதல்எதிரியாக இவர்கள் ஆக்கிக் கொண்டதாலும், முஸ்லிம்களை வேறோடு கிள்ளி எறிய அவர்கள் செய்த கொடுமைகளாலும், அவர்களின் பலம் குன்றியது. இந்துத்துவாவிற்கு நிகரான விடுதலைப்புலிகளை விட சிங்களபௌத்த வெறியர்கள் பரவாயில்லை என்ற நிலைமை இதனால் ஏற்பட்டது. இவர்கள் போராளிகள் அல்ல பிறநாடுகளிலும் புகுந்து வன்முறையில் ஈடுபடும் பயங்கரவாதிகள் என்ற எண்ணம் (வல்லரசு நாடுகள் உட்பட) எல்லா நாடுகளுக்கும் ராஜிவ் கொலையால் ஏற்பட்டது. பலநாடுகளும் இவர்களைப் பயங்கரவாதிகள் பட்டியலில் சேர்க்கும் நிலை ஏற்பட்டது. இதை நன்கு பயன்படுத்திக் கொண்ட சிங்களஅரசு அனைத்து நாடுகளின் ஆதரவுடன் செயல்பட்டு புலிகளை முற்றாக ஒழித்தே கட்டிவிட்டது. 

புலிகளின் கொடூரமான ஆட்சிமுறையால் சொல்லொனாத் துன்பங்களை அனுபவித்து வந்த வடமாகாணத் தமிழர்கள் தற்போது நிம்மதிப் பெருமூச்சு விடுகின்றனர். எப்போது என்ன நடக்குமோ என்று அஞ்சி வாழ்ந்த நிலை மாறியுள்ளது. எனவே விடுதலைப் புலிகளின் பாதையில் செல்லக் கூடாது என்று இலங்கைத் தமிழர்கள் உறுதியுடன்உள்ளனர். இவர்களின் விருப்பத்திற்கு நேர்மாறாகத்தான் இங்குள்ளவர்கள் தனிநாடு கோரிக்கையை முன்வைத்து போராட்டம் நடத்தி தங்களைத் தாங்களே ஏமாற்றி வருகிறார்கள். இங்கே இந்தக் கோரிக்கை வைப்பதால் அங்குள்ள இலங்கைத் தமிழர்கள்மீது அடக்குமுறை அதிகரிக்கத்தான் செய்யும். சிங்களர்களின் கோபம் தமிழர்களுக்கு எதிராகத் திரும்பும்பட்சத்தில் ராஜபக்சேஅரசு அதை வேடிக்கை பார்க்குமே தவிர, தமிழர்களைப் பாதுகாக்காது. 

திராவிடநாடு கேட்டு அண்ணாதுரை போராடினார். வடக்கு வாழ்கிறது, தெற்கு தேய்கிறது என்றெல்லாம் வாதங்களை எடுத்து வைத்தார். இந்திய அரசு இரும்புக்கரம் கொண்டு அதை அடக்கி விட்டது. திராவிடநாடு கோரிக்கையை நாங்கள் கைவிடுகிறோம், ஆனால் அதற்கான காரணங்கள் அப்படியேதான் உள்ளன என்று அண்ணா அந்தர்பல்டி அடித்ததை நாம் மறந்துவிட முடியாது. காரணங்கள் இருந்தாலும் அதைக் கேட்டுப்பெற முடியாத அளவிற்கு அடக்குமுறைகளை எதிர்கொள்ள நேரிடும் என்பதால் அது கைவிடப்பட்டது. தனிநாடு கோரிக்கைக்கு இதுதான் முடிவாகும். 

ஆந்திராவை இரு மாநிலங்களாகப் பிரிப்பதற்கே பல உயிர்களைப் பலிகொடுத்து போராட வேண்டியிருக்கிறது. இன்னும் தெலுங்கானா உருவானபாடில்லை. பாகிஸ்தான் பிரிவினையின் போது இருநாடுகளையும் வெள்ளையர்களே பிரித்துத் தந்துவிட்டு சென்றதால் பாகிஸ்தான் சாத்தியமானது. அவ்வாறு செய்யாமல் அவர்கள் சென்றிருந்தால் இந்த இருநாடுகளும் ஒரே நாடாகத்தான் இன்றுவரை இருந்திருக்கும். பங்களாதேஷ் நாடானது முஜிபுர்ரஹ்மானின் அவாமிலீக் கட்சியின் போராட்டங்களாலும், கடும் பதிலடிகளாலும் மட்டுமே உருவானதல்ல. அப்போதைய இந்தியப் பிரதமர் இந்திராகாந்தி இந்திய ராணுவத்தை அனுப்பியதால்தான் கிழக்கு பாகிஸ்தான் பங்களாதேஷாக மாறியது. பாலஸ்தீனம் நீண்ட போராட்டங்களுக்குப் பிறகு இன்று சுதந்திரநாடாக ஐநாவில் அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது என்றால், அவர்கள் தங்கள் மண்ணுக்கு வெளியே வேறுநாடுகளில் எந்தத் தாக்குதலிலும் ஈடுபடவில்லை என்பதும், முழு இஸ்ரேலும் பாலஸ்தீனியர்களிடத்திலிருந்து பிடுங்கப்பட்டது என்பதால் ஏற்பட்ட அனுதாபமும் காரணமாகஇருந்தது. இது போன்ற எந்தச் சாதகமான அம்சமும் இலங்கையில் இல்லாத போது, இங்கிருந்து தனிநாடு கேட்பதற்கு நிகரான அறியாமை வேறு எதுவும் இருக்க முடியாது. 

அடுத்து அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை ஆதரிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் அபத்தமான ஒன்றே. அமெரிக்கா தீர்மான நகலை வெளியிட்டு, அதன் நகலை வாசித்துப் பார்த்துவிட்டு இப்படியான கோரிக்கையை தமிழீழ ஆதரவாளர்களும் மாணவர்களும் வைக்கவில்லை. மனிதஉரிமை மீறல்களிலும், போர்க்குற்றங்களிலும் முதல்இடத்தில் உள்ள அமெரிக்காவைப் பற்றி இங்குள்ள அரசியல்கட்சித் தலைவர்களுக்கு எந்த அறிவும் இல்லை என்று தான் நமக்குத் தோன்றுகிறது. 

தனது ஆதாயத்திற்காக உலகநாடுகளை மிரட்டுவதும், காரியம் சாதித்துக் கொள்வதும் அமெரிக்கவிற்கு கைவந்த கலையாகும். தீர்மானம் கொண்டு வரப்போகிறோம் என்று பயம்காட்டி புரோக்கர் சுப்பிரமணியசாமி மூலம் அமெரிக்காவுக்குச் சாதகமாகப் பேசவேண்டியதைப் பேசிமுடிக்கத்தான் அமெரிக்கா இந்த நாடகத்தை நடத்தியது. இலங்கை அரசுடன் அரசியல் புரோக்கர் மூலம் பேச்சுவார்த்தை முடிந்து விட்டதால், உப்புசப்பு இல்லாத தீர்மானத்தைக் கொண்டு வந்து தமிழகப் போராளிகள் அனைவர் மீதும் கரியைப்பூசி விட்டது. ராஜபக்சே அரசு தமிழர்களுக்கு அடிப்படை வசதிகளைச் செய்து கொடுக்கவேண்டும் என்ற அடிப்படையில்தான் இந்தத் தீர்மானம் உள்ளது. ராஜபக்சேவை போர்க்குற்றவாளியாக்கி அவரைத் தூக்கில் போடப் போகிறோம் என்ற தமிழகத் தலைவர்களின் கனவு முற்றிலும் கலைந்து விட்டது. இப்போது அனைவரும் அந்தர்பல்டி அடித்து, அமெரிக்கத் தீர்மானத்தில் இந்தியஅரசு திருத்தம் கொண்டுவர வேண்டும் என்றுபுரண்டு பேசுகிறார்கள். 

ஒரு தீர்மானத்தை ஆதரிக்க வேண்டும் என்று மக்கள் மத்தியில் கூறுவதற்கு முன் அந்தத் தீர்மானத்தைப் பற்றி அறிந்திருக்க வேண்டும் என்ற குறைந்தபட்ச பொறுப்புணர்வுகூட இவர்களுக்கு இல்லாமல் போய்விட்டது. அறிவுஜீவிகளுக்கும், ஊடகங்களுக்கும் கூட இந்த அறிவு இல்லாமல் போய்விட்டது. அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானம் ஒன்றே தனிஈழத்தைப் பெற்றுத்தரும், ராஜபக்சேயைத்தண்டிக்கும் என்று சிறுபிள்ளைத்தனமாக ஊடகங்களில் முகம் காட்டியவர்கள் வெட்கமின்றி பல்டி அடிக்கின்றனர். 

எமது கணிப்பு பிரகாரம், தமிழகமே கொந்தளித்தாலும், மத்திய அரசு இலங்கைக்கும் ராஜபக்சேவுக்கும் எதிராக ஒன்றுமே செய்யாது. ராஜிவ்காந்தி படுகொலைக்கு கணக்கு தீர்ப்பதற்காக எந்த விலையையும் காங்கிரஸ் தமிழகத்தில் கொடுக்கும். ராஜபக்சேவுக்கு வலிக்காத வகையில் தடவிக் கொடுக்கும் மத்திய அரசின் நிலையில் எந்தமாற்றமும் இருக்காது.


Copyright © www.onlinepj.com

தெலுங்கானா - ஓர் ஆய்வு

பற்றி எரியும் ஆந்திரா! 

விதைத்ததை அறுவடை செய்யும் காங்கிரஸ்!! 

ஆந்திர மாநிலத்தில் இருந்து தெலுங்கானா பகுதியைப் பிரித்து தனி மாநிலமாக அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தும் போராட்டங்கள் அறுபது ஆண்டுகளாக நடந்து வருகின்றன. ஆளும் வர்க்கம் இதற்குச் செவி சாய்க்க மறுத்து வந்தது. இன்றோ அலட்சியப்படுத்த முடியாத அளவுக்குப் போராட்டம் தீவிரமடைந்ததால் வேறு வழியின்றி தனித் தெலுங்கானா மாநிலம் அமைக்கப்படும் என்று மத்திய அரசு உறுதியளித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை தற்காலிகமாகச் சமாதானப்படுத்தியுள்ளது. 

காங்கிரஸ் அரசின் இந்த வாக்குறுதி நிறைவேற்றப்படும் என்று சொல்ல முடியாது. மக்கள் கொந்தளிக்கும் போது அதை நீர்த்துப் போகச் செய்வதற்காக இது போல் வாக்குறுதி கொடுத்து பின்னர் கிடப்பில் போடுவது தான் காலம் காலமாக காங்கிரஸ் கடைப்பிடித்து வரும் தந்திரம். பாபர் மசூதி அதே இடத்தில் கட்டித் தரப்படும் என்பது போல் நூற்றுக்கணக்கான உதாரணங்கள் உள்ளன. அதற்கான உள்ளடி வேலைகளையும் காங்கிரஸ் செய்ய ஆரம்பித்துள்ளது. 

மாநிலத்தைப் பிரிப்பதற்கு சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று இப்போது காங்கிரஸ் கூறுகிறது. சட்டசபையில் தீர்மானம் போட்டுத் தான் பிரிக்க முடியும் என்றால் அது சாத்தியமே இல்லை. ஏனெனில் தெலுங்கனா பகுதியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் மற்ற பகுதி சட்டமன்ற உறுப்பினர்களை விட குறைந்த எண்ணிக்கையில் உள்ளனர். தெலுங்கானா பகுதியின் சட்டமன்ற உறுப்பினர்கள் மட்டும் தான் ஆதரவாக வாக்களிப்பார்கள். மற்றவர்கள் எதிர்த்து வாக்களிப்பார்கள் என்பதால் தீர்மானம் நிச்சயம் தோற்று விடும். 

சட்டசபையில் தீர்மானம் போட்டுத் தான் பிரிக்கப்படும் என்றால் தெலுங்கானா பிரிக்கப்படும் என்று திட்டவட்டமாக அறிவித்தது எப்படி? சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி பிரிப்பது என்றால் அளவில் சிறிதாக உள்ள புறக்கணிக்கப்படும் பகுதி ஒருக்காலும் பிரிந்து செல்ல முடியாது. பெரும்பாலானவர்கள் பிரிந்து செல்ல ஒப்புக் கொள்ளவே மாட்டார்கள். எனவே ஒரு பக்கம் தெலுங்கானா அமைக்கப்படும் என்று கூறிவிட்டு மறு பக்கம் தெலுங்கானா அமையாமல் இருப்பதற்குரிய வேலையைச் சத்தமில்லாமல் செய்து வருகிறது காங்கிரஸ் அரசு. 

பிரிக்கப்படுமா? பிரிக்கப்படாதா? என்பதை விட பிரிக்கப்பட வேண்டுமா? இல்லையா? என்பது தான் நாம் ஆராய வேண்டிய விஷயம். ஆந்திர மாநிலத்தின் வரலாற்றைத் தெரிந்து கொண்டால் தான் இக்கோரிக்கையில் நியாயம் இருக்கிறதா என்பதை அறிய முடியும். 

வெள்ளையர்கள் ஆட்சியின் போதும், நாடு விடுதலை அடைந்த போதும் ஆந்திரா என்ற மாநிலம் இருக்கவில்லை. தெலுங்கானா எனப்படும் தக்கானம் தான் இருந்தது. இது ஹைதராபாத் நிஜாம் மன்னரின் ஆளுகையின் கீழ் இருந்தது. நாடு விடுதலை அடைந்த பின்னர் தனி நாடாக இருந்த தெலுங்கானாவை இந்திய அரசு பலப்பிரயோகம் செய்து இந்தியாவுடன் இணைத்துக் கொண்டது. இந்தியாவின் ஒரு மாநிலமாக தெலுங்கானா ஆக்கப்பட்டது. தெலுங்கானாவைத் தவிர ஆந்திராவில் உள்ள மற்ற பகுதிகள் அப்போதைய சென்னை மாகாணத்தில் இருந்தன. தெலுங்கு பேசும் இப்பகுதியினர் சென்னை மாகாணத்தில் இருந்து தங்கள் பகுதியைப் பிரித்து தெலுங்கு மாநிலம் அமைக்கப் போராடி வந்தனர். ராமுலு ரெட்டி என்பவர் இதற்காக உண்ணாவிரதம் இருந்து உயிர் துறந்தவுடன் தெலுங்குப் பகுதிகளில் வன்முறை வெடித்து மத்திய அரசு பணிந்தது. அவர்களின் கோரிக்கையை ஏற்றுக் கொண்டு சென்னை மாகாணத்தில் இருந்த தெலுங்கு பகுதிகள் ஆந்திரா எனும் மாநிலமாக ஆக்கப்பட்டது.

சென்னை மாகாணத்தில் இருந்து பிரிந்த பகுதிகள் ஆந்திரா என்றும், நிஜாம் மன்னரின் ஆளுகையில் இருந்த தெலுங்கானா இன்னொரு மாநிலமாகவும் இருந்தால் குடிமூழ்கப் போவதில்லை. ஆனாலும் இரண்டையும் இணைத்து ஒரு மாநிலமாக்க வேண்டும் என்று நேருவும், பட்டேலும் விடாப்பிடியாக இருந்தனர். இணைக்க வேண்டும் என்று எந்தப் போராட்டமும் நடக்காமல் இருந்தும் பெரும்பானமை மக்கள் அதை விரும்பாமல் இருந்தும் மக்கள் விருப்பத்துக்கு மாற்றமாக இரண்டையும் இணைக்க வேண்டும் என்பதில் குறியாக இருந்தனர். இதற்காக அமைக்கப்பட்ட சீரமைப்புக்குழு இணைப்பதில் கேடுகள்தான் அதிகம் என்று அறிக்கை தந்த பின்பும் தெலுங்கானாவை ஆந்திராவுடன் இணைக்க வேண்டும் என்று மக்கள் விருப்பத்துக்கு எதிராக இணைத்தனர். இதற்குக் காரணம் என்ன? 

தெலுங்கானா பகுதியில் ஆதிலாபாத், நிஜாம் பாத், கரீம் நகர், ஹைதராபாத், மஹ்பூப் நகர் ஆகிய ஐந்து மாவட்டங்கள் முஸ்லிம்கள் பெரும்பான்மை மாவட்டங்களாக இருந்தன. (மாவட்டங்களின் பெயர்களே இதைச் சொல்லும் வகையில் உள்ளன). மேடக், வாரங்கல், கம்மம், ரங்காரெட்டி, நலகொண்டா ஆகிய மாவட்டங்களில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக இருக்கவில்லை. தெலுங்கானா தனி மாநிலமாக இருந்து முஸ்லிம்கள் ஒன்றுபட்டு வாக்களித்தால் தொடர்ந்து ஒரு முஸ்லிம் தான் முதலமைச்சராக வர முடியும் என்ற நிலைமை வல்லபாய் பட்டேலுக்கும், நேருவுக்கும் உறுத்தலாக இருந்தது. சென்னையில் இருந்து பிரிக்கப்பட்ட ஆந்திராவுடன் தெலுங்கானாவைச் சேர்த்து விட்டால் முஸ்லிம்கள் சிறுபான்மையாகி விடுவார்கள் என்ற ஒரே காரணத்துக்காகவே ஆந்திராவுடன் தெலுங்கானா இணைக்கப்பட்டது. 

நேருவும் பட்டேலும் அத்துடன் திருப்தி அடையவில்லை. சென்னையில் இருந்து பிரிந்த பகுதிகளில் உள்ள ஆதிக்க சாதியினரை தெலுங்கானா பகுதியில் குடியமர்த்தும் குள்ள நரித்தனத்தையும் செய்து முடித்தனர். அதாவது தெலுங்கானா பகுதியில் கூட முஸ்லிம்களின் பெரும்பான்மையை ஒழிக்க வேண்டும் என்பது தான் இதற்குக் காரணம். மக்கள் விரும்பாத போதும், இணைக்கக் கூடாது என்று நிபுணர்கள் அறிக்கை அளித்த பின்பும் இணைப்பதற்கு நேரு சொன்ன காரணம் ஒரு மொழி பேசும் மக்கள் இரண்டு மாநிலங்களாக இருக்கக் கூடாது என்பது தான். ஆனால் இந்தி மொழிக்கு மட்டும் பல மாநிலங்கள் இருந்தது எப்படி என்று சிந்திக்கும் போது நேரு சொன்ன காரணம் பொய்யானது என்பது தெரிய வரும். 

பாகிஸ்தான் பிரிவினையின் போது இங்குள்ள முஸ்லிம்களுக்கு ஏற்பட்ட குற்ற உணர்வின் காரணமாகவும், ராணுவ பலம் மூலம் தெலுங்கானா இந்தியாவுடன் சேர்க்கப்பட்டதாலும், தெலுங்கானா முஸ்லிம்கள் இதை எதிர்த்துப் போராடும் மனநிலையில் இல்லை. அதற்கான மனவலிமையும் அவர்களுக்கு அப்போது இல்லை. அன்று விதைத்ததைத் தான் காங்கிரஸ் இப்போது அறுவடை செய்கிறது. 

ஆந்திராவை விட தெலுங்கானா நீர் வளமும், கனிம வளமும் நிறைந்ததாக இருந்தும் ஆந்திராவின் உயர்சாதி ஆதிக்கவாதிகளால் எல்லா வளமும் ஆந்திராவுக்கு என்று ஆனது. தெலுங்கானாவில் உற்பத்தியாகும் நதிகளில் 90 சதவீதம் தண்ணீர் ஆந்திராவுக்கும், பத்து சதவீதம் தெலுங்கானாவுக்கும் என்று அநீதி இழைக்கப்பட்டது. இதன் காரணமாகவே இங்கே நக்ஸலைட்டுகள் உருவானார்கள். ஒடுக்கப்பட்ட மக்களை மீண்டும் ஆதிக்க சாதியினர் ஒடுக்குகிறார்கள் என்பதால் சட்டத்தை நக்ஸலைட்டுகள் கையில் எடுக்கும் அளவுக்கு தெலுங்கானா புறக்கணிக்கப்பட்டது. இதை வெகுஜன மக்களின் கருத்தாக சந்திரசேகர ராவ் மாற்றினார். ஹைதராபாத் நிஜாம் பெயரில் அமைந்த உஸ்மானியா பல்கலைக் கழக மாணவர்களும் இப்போராட்டத்தில் குதித்ததால் நிலைமை தீவிரமடைந்தது; மத்திய அரசைப் பணிய வைத்துள்ளது. இப்போது தெலுங்கானா பிரிக்கப்படுவதால் முஸ்லிம்கள் பெரும்பான்மை மாநிலமாக அது அமையாது. ஏனெனில் குடியேற்றத்தின் மூலம் முஸ்லிம் பெரும்பான்மை என்பது குறைக்கப்பட்டு விட்டது. ஆனால் கனிசமான இடங்களை முஸ்லிம்கள் பெறக் கூடிய நிலைமை தெலுங்கானாவில் இருக்கும். 

அநியாயமாக, கெட்ட எண்ணத்துடன் ஆந்திராவில் சேர்க்கப்பட்ட தெலுங்கானா தனி மாநிலமாக ஆவது தான் செய்த அநியாயத்திற்கான ஒரே பரிகாரமாகும் என்பதில் ஐயமில்லை. மேலும் பொதுவாக பார்க்கும் போது பெரிய மாநிலங்கள் பிரிக்கப்படுவது சிறந்த நிர்வாகத்தைத் தர உதவும். 30 கோடி மக்களைக் கொண்டதாக இந்தியா இருக்கும் போது 25 மாநிலங்கள் இருந்தன என்றால் இன்று நூற்றிப் பத்து கோடியை மக்கள் தொகை தாண்டிய பிறகு 100 மாநிலங்களாவது அமைவது தான் சரியான தீர்வாக இருக்க முடியும். தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்கள் குறைந்தது நான்கு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டால் ஒரு முதல்வரால் சிறப்பாகக் கண்காணிக்க முடியும். அமைச்சர்களை மக்கள் எளிதாகச் சந்திக்க முடியும். மாநிலத்தின் அனைத்து பகுதிகளும் சமமாக முன்னேற முடியும். தமிழகத்தில் தென் மாவட்டங்கள் புறக்கணிக்கப் படுவதை யாரும் மறுக்க முடியாது. மக்கள் போராட்டம் நடத்தாவிட்டாலும் அறிவும், தூர நோக்கும் மக்கள் நலனில் அக்கறையும் உள்ள அரசாங்கம் தானாக முன் வந்து மாநிலங்களைப் பிரிக்க வேண்டும். 

ஒரு மாநிலம் என்பது ஒரு கோடி முதல் இரண்டு கோடி மக்களைக் கொண்டதாக இருக்கும் வகையில் பிரிப்பது நாட்டுக்கு நல்லது. இதனால் மொழி வெறி கூட மறைந்து போய் விடும்


Copyright © www.onlinepj.com

நம் ராணுவ வீரர்களை பாகிஸ்தான் கொன்றது ஏன்?

இந்திய வீரர்கள் இருவர் எல்லைப்பகுதியில் தலை வெட்டிக் கொல்லப்பட்டதன் உண்மை நிலவரம் என்ன? 
- முகம்மது அபுதாஹிர், கம்பம். 

காரணத்தைக் கண்டுபிடிக்காமல் அனைவரும் பிதற்றிக் கொண்டு உள்ளனர். இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் உள்ள எல்லைக்கோட்டை இருநாடுகளும் காவல் காப்பதில்லை. வாகா எல்லையில் ஒரு கோட்டைப் போட்டுவிட்டால் இங்கிருந்தும் அங்கிருந்தும் எவரும் உள்ளே போக முடியாது என்று இரு நாடுகளும் நினைக்கின்றன. பாதுகாப்பு போடப்பட்ட சாலைகள் தவிர மற்ற பகுதிகளில் அந்த நாட்டில் இருந்து இந்த நாட்டிற்கும், இந்த நாட்டிலிருந்து அந்த நாட்டிற்கும் யாரும் போகலாம் என்ற பாதுகாப்பற்ற நிலையில்தான் எல்லைப்பகுதி அமைந்துள்ளது. 

அதனால்தான் பாகிஸ்தானிலிருந்து கார்கில்வரை நெடுந்தூரம் இந்தியாவுக்குள் பாகிஸ்தான் ஊடுருவி, கார்கிலில் பீரங்கி உள்ளிட்ட ஆயுதங்களைக் குவித்து வைத்தது. இதை இந்திய அரசாங்கம் அறிந்து கொள்வதற்கே பல மாதங்கள் ஆயின. இதன் பின்னர் இந்தியாவிற்கு உள்ளேயே இந்தியா - பாகிஸ்தான் போர் நடந்தது. பின்னர் கார்கிலிலிருந்து பாகிஸ்தான் வீரர்கள் விரட்டி அடிக்கப்பட்டனர். 

அந்த நிலையில் இப்போதும்கூட பெரிய மாற்றம் ஏற்படவில்லை. எல்லையைக் காக்கும் இராணுவத்தினர் உள்நாட்டுப் பிரச்சினைகளைச் சமாளிக்கவும் குடிமக்களைக் கொன்று குவிக்கவும் பயன்படுத்தப்படுகின்றனர். பல இராணுவ அதிகாரிகளும் வீரர்களும் குடித்துவிட்டு காமக்களியாட்டத்தில் வீழ்ந்து கிடக்கின்றனர். இப்படி எல்லை திறந்து கிடக்கும்போது இந்திய வீரர்கள் நமது எல்லையை அறியாமல் பாகிஸ்தான் எல்லைக்குள் போய்விடுவார்கள். பாகிஸ்தான் வீரர்கள் கண்களில் தப்பித் தவறி பட்டுவிட்டால் அவர்களைச் சுட்டுக் கொன்று பிணத்தை இந்திய எல்லைக்குள் போட்டு விடுவார்கள். 

இந்தச் செயலை இந்திய வீரர்களும் செய்கிறார்கள். அரசும் இராணுவமும் எதிரி நாட்டின் எல்லையை வரையறுத்து, ஒவ்வொரு அங்குலத்தையும் கண்காணிப்பதுடன் எல்லையைக் காப்பதுதான் இராணுவத்தின் முதல் வேலை என்பதை உணர்ந்து பாதுகாப்பைப் பலப்படுத்தினால் தவிர இதுபோன்ற கொலைகளைத் தடுக்க முடியாது. 

பாகிஸ்தானிலிருந்து ஊடுருவும் பாகிஸ்தான் வீரர்களை இந்திய வீரர்கள் சுட்டுக் கொன்றாலும், இந்தியாவிலிருந்து ஊடுருவும் இந்திய வீரர்களை பாகிஸ்தான் இராணுவம் சுட்டுக் கொன்றாலும், இரு அரசுகளின் உத்தரவோ, இராணுவத் தலைமையின் உத்தரவோ இதற்குக் காரணமில்லை. மாறாக ஆயுதம் தரித்து நமது எல்லைக்குள் யார் வந்தாலும் சுட்டுக் கொல்லலாம் என்ற பொதுவான இராணுவ விதிகள்தான் காரணம். மீன் பிடிப்பதற்காக எல்லை தாண்டி இலங்கை எல்லைக்குள் செல்லும் மீனவர்கள் சுட்டுக் கொல்லப்படுகிறார்கள். இராணுவ வீரர்கள் இன்னொரு நாட்டு எல்லைக்குள் போனால் சுட்டுத் தள்ளுவதும் அதை விடக் கடுமையானது. 

பாகிஸ்தான் இராணுவத்தினர் இந்தியாவுக்குள் புகுந்து இங்குள்ள வீரர்களைக் கொன்று போட்டுவிட்டு ஓடிவிட்டது போல் கதையளந்து கொண்டு இருக்கிறார்கள். இவர்கள் கதையளப்பது உண்மை என்றால் நாட்டின் பாதுகாப்பு இன்னும் பலவீனமாக உள்ளது என்பதுதான் பொருள். பாகிஸ்தான் இரணுவம் நமது நாட்டுக்குள் ஊடுருவி வந்து கொன்றுபோடும் வரை நமது இராணுவ வீரர்கள் அப்படி என்ன கடமையைச் செய்துகொண்டு இருந்தார்களோ, தெரியவில்லை. அப்படி நடந்திருந்தால், பொறுப்பற்ற நமது இராணுவ வீரர்கள்தான் கண்டிக்கப்பட வேண்டும். இது போன்று பா.ஜ.க. ஆட்சியின் போதும் நடந்தது என்று இராணுவத் தளபதியே கூறியிருக்கிறார். இப்போதுதான் இது முதல் முறையாக நடக்கவில்லை. எல்லா ஊடகங்களும் பா.ஜ.க.வுக்கு ஆதரவாக இருப்பதால், வரும் தேர்தலில் காங்கிரஸைத் தோற்கடிக்க இதைக் கையில் எடுத்துப் பெரிதாக்குகின்றன. தேர்தல் நெருங்கும் போதெல்லாம் ஊடகங்களின் இதுபோன்ற பாசிசம் தலைவிரித்தாடுவது வழக்கம். 

நாடு முழுவதும் சிறுமிகள் கற்பழிக்கப்படுகின்றனர்.டெல்லியை எடுத்துக் கொண்டால் கூட பா.ஜ.க. ஆட்சியிலும் இதுபோன்ற எண்ணற்ற சம்பவங்கள் நடந்து வழக்குகளும் நடந்து வருகிறது. தேர்தல் நெருங்கி வருவதால்,  எல்லா ஊடகங்களும் சங்பரிவாரத்தில் பயிற்சி எடுத்தவர்களின் ஆதிக்கத்தில் உள்ளதால், டெல்லியை மட்டும் குறிவைத்து விமர்சிக்கிறார்கள். பா.ஜ.க.வுக்கு ஆதரவான  நிலையை ஏற்படுத்த இதைப் பயன்படுத்துகிறார்கள். 

இது போன்றது தான் இராணுவ வீரர்களின் தலையை வெட்டி கொலை செய்த சம்பவமும். இது இரு தரப்பிலும் அடிக்கடி நடக்கும் சம்பவம்தான். இரு தரப்பிலும் எல்லையைக் காப்பதில் காட்டும் மெத்தனமும் அலட்சியமும் தான் காரணம். இதைப் புரிந்த நடவடிக்கை எடுத்தால் தவிர இது போன்ற சம்பவங்களைத் தடுக்க முடியாது.


Copyright © www.onlinepj.com

தமிழக மீனவர் பிரச்சனைக்கு தீர்வு என்ன

கேள்வி:
தமிழக மீனவர்கள் இலங்கை அரசால் அடிக்கடி கைது செய்யப்படுவதைக் கண்டித்து தவ்ஹீத் ஜமாஅத் களம் இறங்காதது ஏன்? 
- அபூ ராஜியா, இராமேஸ்வரம் 

பதில்:
ஓட்டுப் பொறுக்கும் அரசியல்வாதிகளுக்குத் தான் மக்களின் உணர்ச்சிகளுக்கு ஏற்ப போலிப் போராட்டம் நடத்தும் அவசியம் இருக்கிறது. தவ்ஹீத் ஜமாஅத் ஓட்டுப் பொறுக்கும் அரசியல் நடத்தாத காரணத்தால் போலிப் போராட்டங்களை நடத்துவதில்லை. இது தான் காரணம். 

இந்தியாவுடன் ஒப்பிடும் போது இலங்கை ஒரு குட்டி நாடு. இந்தியாவுடன் மோதிப் பார்க்க அந்த நாட்டுக்குப் பலமோ துணிவோ கிடையாது. இந்திய மீனவர்களைச் சட்ட விரோதமாகப் புகுந்து பிடித்துச் செல்லும் வலிமையும் இலங்கை அரசுக்குக் கிடையாது. இதை முதலில் நாம் புரிந்து கொள்ள வேண்டும். இதற்கான அடிப்படைக் காரணத்தை விளங்கிக் கொண்டால் தான் தமிழ் மொழியைச் சொல்லி மக்களை ஏமாற்றுவோரின் போலித்தனம் புரியும். 

ஒவ்வொரு நாட்டுக்கும் தரை வழியில் எல்லைகள் உள்ளது போல் கடலிலும் எல்லைகள் உள்ளன. இந்தக் கடல் எல்லைகள் இரு வகையில் அமைக்கப்பட்டுள்ளன. 

ஒரு நாடு தன்னை ஒட்டியுள்ள கடலில் 22.2 கிமீ தூரத்தை தனது எல்லையாக வைத்துக் கொள்ளலாம். அந்த எல்லை அந்த நாட்டுக்குச் சொந்தமானது என்பது சர்வதேச அளவில் ஒப்புக் கொள்ளப்பட்ட விதியாகும். இந்த எல்லைக்குள் அந்நிய நாட்டவர் நுழைந்தால் அது சட்ட விரோத அத்துமீறலாகும்.  அந்தக் கடல் எல்லைக்குள் அந்த நாட்டின் அனுமதி பெற்றே யாரும் பிரவேசிக்க முடியும். 22.2 கிலோ மீட்டருக்கு அப்பால் உள்ள கடல் பரப்பு யாருக்கும் சொந்தமானதல்ல. அனைவருக்கும் பொதுவானது. யார் வேண்டுமானாலும் அனுமதி இல்லாமல் அந்த வழியாகக் கடந்து செல்லலாம். இது முதல் வகையான எல்லை. 

ஒரு நாட்டை ஒட்டியுள்ள கடலில் 393 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள வளங்கள் அனைத்தும் அந்த நாட்டுக்கே சொந்தமானதாகும். அந்நிய நாட்டவர்கள் அங்கே எண்னெய்க் கிணறுகள் தோண்டுவதோ அங்கு தளம் அமைப்பதோ கூடாது. கடந்து செல்லும் வழியாக மட்டுமே அதைப் பயன்படுத்திக் கொள்ளலாம். இது இரண்டாவது வகை எல்லையாகும். 

இரு நாடுகளிடையே பிரச்சினை ஏற்படாதிருக்க இது போன்ற விதிகள் அவசியமானவை என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் பரந்து விரிந்த கடல் பரப்பில் தான் 22.2 கிமீட்டர் தூரத்தையும், 393 கிமீட்டர் தூரத்தையும் ஒரு நாடு தனதாக்கிக் கொள்ள முடியும். இரு நாடுகளிடையே உள்ள கடல் பரப்பு குறைவாக இருந்தால் அப்போது இந்த சர்வதேச விதியைச் செயல்படுத்த முடியாது. 

இதற்கு உதாரணமாக இந்திய இலங்கை கடல் எல்லையை எடுத்துக் கொள்ளலாம். தமிழகத்துக்கும் இலங்கைக்கும் இடையே மொத்த கடல் எல்லையே 30 கிமீட்டர் தான். இந்தியாவோ இலங்கையோ 22.2 கிமீட்டர் தூரத்தை தனது எல்லையாக எடுத்துக் கொள்ள முடியாது. இது போன்ற நாடுகள் தமக்கிடையே பேச்சு வார்த்தை நடத்தி தங்கள் எல்லையைப் பேசி நிர்ணயித்து ஒப்பந்தம் செய்து கொள்ளலாம். இணக்கமான நிலை ஏற்படாவிட்டால் சர்வதேச நாடுகளின் துணயுடன் அல்லது ஐநா சபை மூலம் எல்லைகளை நிர்ணயித்துக் கொள்ளலாம். 

புலிகளின் பிரச்சினை இல்லாத காலகட்டத்தில் இந்தியாவும், இலங்கையும் தமது கடல் எல்லை குறித்து அலட்டிக் கொள்ளவில்லை. இந்தியர்கள் இலங்கையின் நிலப் பகுதி வரை சாதாரணமாகச் சென்று வந்தனர். எண்ணற்ற தமிழர்கள் கள்ளத்தோணி வழியாக இலங்கை சென்று அங்கே பல காலம் இருந்து விட்டு கள்ளத்தோணி வழியாகவே இந்தியாவுக்கும் வருவார்கள்.அது ஒரு காலம். இரு நாடுகளும் கண்டு கொள்ளாததால் இது பிரச்சனையாக ஆகவில்லை. 

ஆனால் புலிகளின் பிரச்சனை ஏற்பட்ட பின்னர் தமிழகம் வழியாக புலிகள் ஊடுருவினால் தனது நாட்டுக்கு ஆபத்து என்று அஞ்சிய இலங்கை அரசாங்கம் கடல் எல்லையை நிர்ணயிக்க வேண்டும் என்று இந்தியாவை வலியுறுத்தி வந்தது. இதன்படி 1976 ஆம் ஆண்டு இந்திரா காந்தி அவர்கள் பிரதமராக இருந்த போது இரு நாடுகளும் பேசி இவை தான் தங்களின் கடல் எல்லை என்று முடிவு செய்து ஒப்பந்தம் செய்து கொண்டன. இந்த ஒப்பந்தத்தின் பின்னர் தான் இது போன்ற பிரச்சினைகள் வர ஆரம்பித்தன. 

தமிழக மீனவர்கள் வழக்கம் போல் இலங்கை வரை சென்று மீன் பிடிக்க முடியாத நிலை ஏற்பட்டது. அடிக்கடி இலங்கை எல்லக்குள் இந்திய மீனவர்கள் செல்வதும் இலங்கை மீனவர்கள் இந்திய எல்லைக்குள் செல்வதும் நடக்க ஆரம்பித்தன. இரு நாட்டுக் கடற்படையும் ரோந்துப் பணியில் இருப்பதால் தங்கள் எல்லக்குள் வரும் அந்நிய நாட்டவரை ரோந்துப்படையினடர்  கைது செய்வதை சட்டப்படி யாரும் குறை கூற முடியாது. 

இந்திய மீனவர்களை இலங்கை அரசு கைது செய்கிறது என்பதற்காக இந்திய அரசு இலங்கை மீது நடவடிக்கை எடுக்கப் புகுந்தால் சர்வதேச சமுதாயம் வேடிக்கை பார்த்துக் கொண்டிராது. அமெரிக்கா அத்து மீறினால் மட்டுமே சர்வதேச சமுதாயம் வேடிக்கை பார்க்கும். அமெரிக்கா செய்வதை மற்ற நாடுகள் செய்ய முடியாது என்பது தான் எழுதப்படாத விதியாகும். 

இலங்கையின் செயல் சர்வதேச சட்டப்படியானது என்பதால் தான் இந்தியாவால் இலங்கையை எதுவும் செய்ய இயலவில்லை. இலங்கை அரசு இந்திய எல்லைக்குள் புகுந்து கைது செய்தால் அந்த நாட்டுக்கு எதிராகப் போர் செய்ய முடியும். தனது எல்லைக்குள் நுழைபவரைக் கைது செய்ததற்காக அந்த நாட்டை இந்திய அரசு ஒன்றும் செய்ய முடியாது. இந்த விஷயத்தில் அறிவுப்பூர்வமாகச் சிந்தித்து ஆக்கப்பூர்வமான நடவடிக்கை எடுக்கும் பொறுப்பு இந்தியாவுக்குத் தான் உள்ளது. ·

நமது நாட்டு கடல் எல்லையைக் கடக்கும் போது மீனவர்களுக்கு எச்சரிக்கை மணி அடிக்கும் கருவிகளைக் கொடுக்கலாம். ·அல்லது நமது இலங்கையை ஒட்டியுள்ள கடலில் நங்கூரம் பாய்ச்சிய மிதவைகளை மிதக்க விடலாம். அல்லது இந்திய கடல் எல்லையில் ரோந்துப் பணியில் ஈடுபடும் படையினரை அதிகமாக்கி நமது மீனவர்கள் எல்லை மீறிச் செல்லாமல் தடுக்கலாம். அல்லது இரு நாடுகளும் மீண்டும் பேச்சு வார்த்தை நடத்தி ஒவ்வொரு நாடும் ஐந்து கிமீட்டர் தூரத்தை மட்டும் தனது எல்லையாக வைத்துக் கொண்டு மீதி 20 கிமீட்டர் எல்லையை இரு நாட்டுக்கும் பொதுவானதாக வைத்துக் கொள்ளலாம். அப்போது யாரும் வரம்பு மீறிச் செல்லும் நிலை ஏற்படாது. மீனவர்கள் அதிக தூரம் சென்று அதிக மீன்களைப் பிடிக்க இது வாய்ப்பை ஏற்படுத்தும். அல்லது எல்லை மீறும் மீனவர்களைப் பிடித்து ரோந்துப் பணியில் உள்ள இந்தியக் கடற்படையிடம் ஒப்படைக்கலாம். அது போல் அத்துமீறும் இலங்கை மீனவர்களை இந்தியக் கடற்படை பிடித்து இலங்கை கடற்படையிடம் ஒப்படைக்கலாம். அல்லது ஒட்டு மொத்த கடல் எல்லையைப் பொதுவாக ஆக்கிக் கொண்டு தரைவழியாக அந்நிய நாட்டவர் ஊடுருவுவதை மட்டும் கண்காணிக்கலாம். 

இது போல் ஆக்கப்பூர்வமான வழிகளில் சிந்திப்பதை விடுத்து போலிப் போராட்டம் நடத்துவதால் எந்த நன்மையும் மீனவர்களுக்கு ஏற்படப் போவதில்லை. இது தமிழக மீனவர்கள் மட்டும் சந்திக்கும் பிரச்சினை அல்ல. பல நாட்டவர்களும் சந்திக்கும் பிரச்சினை தான். இந்திய மீனவர்கள் பாகிஸ்தானில் கைது செய்யப்பட்டு சிறையில் வாடி விட்டு தாயகம் அனுப்பப்படுகின்றனர். பங்களாதேசிலும் இந்திய மீனவர்கள் கைது செய்யப்படுகின்றனர். பாகிஸ்தான், பங்களாதேஷ் மீனவர்கள் இந்தியக் கடற்படையால் கைது செய்யப்படுகின்றனர். இவை அனைத்துக்கும் இது போன்ற கடல் எல்லை மீறல் தான் காரணம். 

எனவே இந்த விதியை மீறாமல் இருக்க நம்முடைய மீனவர்களுக்குப் பயிற்சி அளிக்க வேண்டும். அல்லது பேச்சு வார்த்தை மூலம் இரண்டு அரசுகளும் தீர்வு காண வேண்டும். இதை விடுத்து வெற்றுக் கூச்சல் போடுவதால் விளம்பரம் கிடைக்குமே தவிர ஒருக்காலும் மீனவர்கள் கைது செய்யப்படுவதை இது தடுக்காது, ஏனெனில் நாமே ஒப்புக் கொண்ட சட்டத்தின்படி தான் இந்தக் கைது நடவடிக்கைகள் அமைந்துள்ளன. உணர்வு 15:46


Copyright © www.onlinepj.com

கூடங்குளம் அணு உலை எதிர்ப்பாளர்கள்

கேள்வி:
கூடங்குளம் அணு  உலை எதிர்ப்பாளர்கள் மீது போலீஸ் நடத்திய தாக்குதல்  சரியான நடவடிக்கையா?  
- ராஜ்முகம்மது, தாம்பரம்

பதில்:
தாக்குதல் சரியா என்ற பிரச்சினைக்குள் நுழைவதற்கு முன் கூடங்குளம் அணு உலை குறித்துநாம் முன்னரே (குரல் 16:12) தெளிவுபடுத்தியதை இங்கே சுட்டிக்காட்டுகிறோம். 

நவீன வசதிகள் எதை  எடுத்தாலும் அதற்கு அதிகமான  விலையை நாம் கொடுத்துத்தான் ஆக வேண்டும். நவீன வாகனங்கள்  மூலம் நாம் சொகுசான பயணத்தை  மேற்கொள்ள முடிகிறது. ஆனால்  வாகனங்களில் இருந்து வெளிப்படும்  நச்சுக்களால் காற்று மாசுபடுகிறது. கெட்ட காற்றை சுவாசித்து நமக்கு நாமே கேடு விளைவித்துக் கொள்கிறோம்.  

அது போல் குளிர் சாதனங்களால்  நாம் சொகுசாக வாழ முடிகிறது  என்றாலும் இதன் காரணமாக  ஓஸோன் படலத்தில் ஓட்டை  விழுந்து பெரிதாகி வருகின்றது. சூரியனில் இருந்து பூமிக்கு வரும் கெட்ட கதிர்களை ஓஸோன்  படலம்தான் வடிகட்டி பூமியை சூரியனின் கேட்டில் இருந்து  பாதுகாக்கிறது. அந்தப் பாதுகாப்பை நாம் கொஞ்சம் கொஞ்சமாக இழந்து வருகிறோம்.  

மேற்கண்ட சாதனங்களுடன் டிவி, கம்ப்யூட்டர் இன்னும் எண்ணற்ற இயந்திரங்கள் காரணமாக பூமி அதிகமாக வெப்பம் அடைந்து வருகிறது. பனிப்பாறைகள் உருகி கடலில் கலந்து கடல் மட்டம் உயர்ந்து கொண்டே வருகின்றது. நாளடைவில் பல ஊர்கள் கடலுக்கு இரையாகி விடும் என்று அஞ்சும் நிலை உருவாகியுள்ளது.  

இந்தியாவில் ஐம்பது கோடி மக்கள் இருந்தபோது அரிசி  கிடைக்கவில்லை. ரேஷன் மூலம்தான்  வாராந்தோறும் புளுத்த அரிசியை  வாங்கும் நிலை இருந்தது. விவசாயத்தைப் பெருக்குவதற்காக நவீன ரசாயன  உரங்கள் பயன்படுத்துவதால் தான் உணவு உற்பத்தி அதிகமாக உள்ளது. ரசாயன உரங்களால்தான் உணவுப் பொருள் அனைவருக்கும் கிடைத்து வருகிறது. ஆனால் இந்த உணவுப் பொருள்கள் நமது உடல் நலனைக் கெடுத்து வருவதை இன்னொரு பக்கம் நாம் உணர்கிறோம்.  

சில நோய்களுக்காக நாம் உட்கொள்ளும் மாத்திரைகள்  பக்க விளைவுகளை ஏற்படுத்தினாலும் அந்த நோயில் இருந்து விடுபட்டால்  போதும் எனக் கருதி அதையும்  சகித்துக் கொள்கிறோம்.  

செல்போன் பேசுவதால்  அதில் இருந்து வெளிப்படும்  கதிர்கள் மூளையைச் சிறிய  அளவில் பாதிக்கும் என்ற போதும் காதின் கேட்கும் திறன் பாதிக்கும் என்ற போதும் நாம் அதைச் சகித்துக்  கொள்கிறோம்.  அதிகப்படியான வெளிச்சம்  கூட கண்களைப் பாதிக்கும் என்றபோதும் நாம் அதிக வெளிச்சம்  தரும் விளக்குகளைப் பயன்படுத்துகிறோம். எந்த நவீன முன்னேற்றமாக இருந்தாலும்  அதனால் நமக்குப் பல கேடுகளும்  சேர்ந்தே ஏற்படுகின்றன.  

இன்றைக்கு நமக்கு மின்சாரம்  என்பது மிக அவசியமான ஒன்றாக ஆகிவிட்டது. மின்சாரம்  சரியாக வழங்கப்படவில்லை  என்பதற்காக ஆட்சியையே மாற்றும் அளவுக்கு அது முக்கிய இடத்தைப் பிடிக்கிறது. 

நிலக்கரி மூலமும்,  தண்ணீர் வீழ்ச்சியின் மூலமும், காற்றாலை மூலமும் நமக்குத் தேவையான மின்சாரம் உற்பத்தி செய்ய முடியவில்லை. எனவேதான் குறைந்த செலவில் அதிக மின்சாரம் பெறும் நோக்கத்தில்  அணு மின்சாரம் தயாரிக்க மத்திய அரசாங்கம் திட்டமிட்டது. எந்த வகை மின்சாரத்தையும்  விட அணு மின்சாரம் அதிக லாபமானது என்பது உண்மைதான்.  

ஆனால் இதில் ஆபத்தும் அதிகம்தான். அணு உலை வெடித்தால் பல உயிர்கள் பலியாகும், பலருக்கு உடல் நிலை கடுமையாகப் பாதிக்கப்படும், பயிர் பச்சைகளும் கூட பாதிக்கப்படும், அந்தப் பகுதி வறண்ட பாலைவனமாக மாறிவிடும் என்றெல்லாம் இதன் ஆபத்துகளைப் பட்டியலிடுகிறார்கள். மேலும் அணுக்கழிவுகளை அழிப்பதும் அதிக காலம் பிடிக்கக் கூடியது. இப்படி இன்னும் பல கேடுகளை அடுக்கிக் கொண்டே போகிறார்கள்.  

அணு உலை வெடித்தால் ஆபத்து அதிகம் என்பது உண்மைதான். ஆனால் வெடிப்பதற்கான வாய்ப்பு இல்லாத வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாக அணு விஞ்ஞானிகளும் மத்திய அரசும் சொல்கின்றனர்.  
இதுதான் இப்போதுள்ள பிரச்சினை. மக்கள் அஞ்சும்போது அந்த அச்சம் விலகும்  வரை அணு உலையின் செயல்பாட்டை  நிறுத்தி வைப்பதுதான் நல்லது. ஏனெனில் அந்தப் பகுதி மக்கள்தான் அணு உலை வெடித்தால் பாதிக்கப்படக்  கூடியவர்கள்.  

ஆனாலும் அவர்களை விட  அணு உலையில் பணியாற்றும்  விஞ்ஞானிகளும், பல்லாயிரம் பணியாளர்களும் தான் முதலில் பாதிக்கப்படுவார்கள். அப்படி இருந்தும் விஞ்ஞானிகளும் வல்லுனர்களும் அங்கே பணிபுரிகிறார்கள் என்றால் அந்த அளவுக்கு அதன் பாதுகாப்பு அம்சத்தில் அவர்களுக்கு நம்பிக்கை உள்ளது. இதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.  

இந்த திட்டத்தைத்  துவக்கும் போதே இதற்கு எதிராக இவ்வளவு கடும் எதிர்ப்பைக்  காட்டி இருந்தால் சுமார் 20 ஆயிரம் கோடி ரூபாய் செலவிட்டு இறுதிக் கட்டம் வரை மத்திய அரசு வந்திருக்காது. நம்முடைய பணம் 20 ஆயிரம் கோடி ரூபாய் செலவிட்டு நாளைக்கு மின்சாரம் தயாரிக்கும் நிலையில் மக்களை அமெரிக்காவின் கைக்கூலி என்று விமர்சிக்கப்படும் உதயகுமார் வகையறாக்கள் தூண்டி விடுகின்றனர், பீதியைக் கிளப்பி விடுகின்றனர். இந்த அணு உலை ரஷ்யாவின் ஒத்துழைப்போடு முடிக்கப்பட்டுள்ளது. இதுவே அமெரிக்காவின் உதவியுடன் நிறுவப்படிருந்தால் நிச்சயம் பாதிரிகளும், உதயகுமார்களும் இவ்வளவு எதிர்ப்பு காட்டியிருக்க மாட்டார்கள் என்ற பிரச்சாரத்தில் அர்த்தம் உள்ளதையும் நாம் மறந்து விட முடியாது. (உணர்வு குரல் 16:12ல் இடம்பெற்றது)  

இவ்வாறு நாம் முன்னரே தெளிவுபடுத்தியுள்ளோம். பல்லாயிரம் கோடி ரூபாய்கள் செலவு செய்து,  இந்தத்  திட்டம் நிறைவடைந்துள்ளது. இந்தத் திட்டம் துவங்கியது முதல் மத்தியில் காங்கிரஸும், பா.ஜ.க.வும் ஆட்சியில் இருந்துள்ளன. இரண்டு ஆட்சிகளிலுமே அணு உலை கட்டுமானப்பணிகள் தொய்வின்றி நடந்து வந்தன. அதுபோல் அணு உலைப் பணிகள் தொடங்கியது முதல் இன்றுவரை திமுகவும் அதிமுகவும் மாறி மாறி தமிழகத்தை ஆட்சி செய்து வந்துள்ளன. இந்த இரு ஆட்சிகளிலும் இப்பணிகளுக்குத் தேவையான ஒத்துழைப்புகள் அளிக்கப்பட்டன. தமிழகத்தில் உள்ள எல்லா கட்சிகளும் இந்த இரு கட்சிகளுடன் கூட்டணி வைத்திருந்தபோதும், இப்பணிகள் தங்குதடையின்றி நடந்ததால், அனைத்துக் கட்சிகளின் தார்மீக ஆதரவுடன்தான் மக்கள் வரிப்பணத்தில் இப்பணிகள் நிறைவடைந்துள்ளன. எனவே எந்தக் கட்சிக்கும் இத்திட்டத்தை எதிர்க்கும் அருகதை கிடையாது. 

உதயகுமார் என்ற அமெரிக்க கைக்கூலியால் இப்பிரச்சினை கிளப்பப்பட்ட உடனே, மாநில அரசு தக்கநடவடிக்கை எடுத்திருந்தால், இரண்டு நாட்களில் இப்பிரச்சினை முடிவுக்கு வந்திருக்கும். ஆனால் மத்திய அரசுக்கு எதிரான போராட்டம் என்ற வகையில் அதிமுக அரசு போராட்டக்காரர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கவில்லை. அவர்களின் போராட்டத்தை நியாயப்படுத்தியது. இது மத்திய அரசுக்கு எதிரானது அல்ல மாறாக இருளில் மூழ்கும் தமிழகத்தைக் காப்பாற்றும் திட்டம் என்பதைக் காலம் கடந்து அதிமுக அரசு உணர்ந்ததால் தான் இவ்வளவு பிரச்சினையும். 

ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தியது சரியா என்ற கேள்விக்கு வருவோம். அணு உலை என்பது அமெரிக்க தூதரகத்தை விடவும், பாராளுமன்றத்தை விடவும் அதிகம் பாதுகாக்க வேண்டிய பகுதியாகும். அணு உலையை நெருங்கலாம், அதன்மீது தாக்குதல்கள் நடத்தலாம் என்ற நிலை ஏற்பட்டு அணு உலை சேதமானால் கூடங்குளம் மட்டுமன்றி அதனைச் சுற்றியுள்ள பல மாவட்ட மக்கள் அழிந்து நாசமாகிவிடக்கூடிய நிலை ஏற்படும். எனவே நாட்டில் உள்ள எந்த அணுஉலையாக இருந்தாலும், அதைநெருங்க முடியாத அளவுக்குப் பாதுகாப்பு கெடுபிடிகள் மிகவும் அவசியம். 

மீனவர்கள் என்பதாலும், கடல் இவர்களுக்கு நிலத்தைப்போல் பழகிவிட்டதாலும் கடலுக்குள் இறங்கி அணு உலையை நெருங்குவதை ஒருக்காலும் நியாயப்படுத்த முடியாது. போலீஸாருக்கு கடலில் இறங்கி பழக்கமோ பயிற்சியோ இல்லாததால் இதைப் பயன்படுத்திக் கொண்டு கடலில் இருந்து கொண்டே போலீஸாரைத் தாக்கியதைக் காண முடிந்தது. உருட்டுக் கட்டைகளால் காவல்துறையினரை இவர்கள் அடித்துத் துவைத்ததையும் காண முடிந்தது. இத்தனைக்குப் பிறகும் போராட்டக்காரர்களுக்கு எதிராக ஊடகங்கள் எந்தக் கருத்தையும் பலமாகப் பதிவு செய்யவில்லை. (தினமலர் மட்டும் இதில் விதி விலக்கு.) நாளை யுரேணியம் நிரப்பப்பட்டு அதன் பின்னர் அணு உலை மீது தாக்குதல் நடத்தப்பட்டால்  நாடே சுடுகாடாகிவிடும். இதனால்  போராட்டக்காரர்களுக்கும் பேரழிவு ஏற்படும்.  

இதைக் கருத்தில் கொண்டு பார்த்தால், மாநில அரசின் நடவடிக்கை போதுமானதாக இல்லை என்றுதான் சொல்ல முடியும்.  தாக்குதலைக் குறை கூற முடியாது.


Copyright © www.onlinepj.com

Monday, 13 January 2014

பெண்

காதலிக்க
பெண் வேண்டுமாம்..

கைப் பிடிக்க
பெண் வேண்டுமாம்..

வாரிசு சுமக்க
பெண் வேண்டுமாம்..

ஆனால்,
வாரிசு மட்டும்
ஆண் வேண்டுமாம்.